புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அரசு அனுமதி வழங்காததால் கடலோர காவல் படையினர் கப்பலை இன்று மீண்டும் திருப்பி அனுப்பினர்.
சென்னை – புதுச்சேரி இடையே தனியாருக்கு சொந்தமான காட்லியா சி குரூஸ் சொகுசு கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து அண்மையில் புறப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சொகுசு கப்பலைத் தொடங்கிவைத்தார். தனியாருக்குச் சொந்தமான இந்த சொகுசு கப்பல் சென்னையில் இருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் வழியாக புதுச்சேரிக்கு வந்தடையும் என்று கூறப்பட்டது.
இந்த சொகுசு கப்பலில் கலாச்சாரத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இருக்கும் என்பதால் இதனை அனுமதிக்கக் கூடாது என்று புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பு சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அண்மையில் பேசிய புதுவை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், இந்த சொகுசு கப்பல் தொடர்பாக எந்தவித தகவலும் புதுவை அரசுக்கு இல்லை. சொகுசு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் கலாச்சாரத்துக்கு எதிரான நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட சொகுசு கப்பல் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்த நிலையில் அரசு அனுமதி வழங்காததால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் சொகுசு கப்பல் புதுச்சேரி வந்துள்ளது. தற்போது வரை புதுச்சேரி அரசு அனுமதி வழங்காததால் அந்த சொகுசு கப்பலை கடலோர காவல் படையினர் திருப்பி அனுப்பினர்.
-ம.பவித்ரா








