அன்புப் பங்காளி வடிவேலு அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியாகிறேன்!”
வடிவேலு தமிழ் உள்ளங்களில் என்றும் தனக்கான இடத்தை தன் நகைச்சுவையால் பெற்றுள்ள ஓர் பெருங்கலைஞ்சன். ஒரே நிமிடத்தில் சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும், சில நேரங்களில் கண்ணீர்த் துளிகளைச் சிந்த வைக்கவும் வல்ல சிறப்பான நடிகன். எந்த நேரத்தில் யார் எது போன்ற மனநிலையிலிருந்தாலும் வடிவேலு காமெடி பார்த்துவிட்டால் சிரித்துவிடுவார்கள்.
மிகுந்த மன உளைச்சல், மன அழுத்தம் கொண்ட இக்கால இளைஞர்கள் தொடர்ந்து பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் மருந்து போட்ட நடிகன். தமிழ் சினிமாவில் நடிப்பால் உயர்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகன் என்றால் அதே போன்று தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்ட காமெடியன் நடிகர் வடிவேலு.
இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இன்று பிறந்த நாள் காணும் இவருக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நகைச்சுவை நடிகர் வடிவேலுக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
அதில் “அசாத்தியமான நடிப்பாற்றலாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், தனக்கே உரித்தான மொழிநடையாலும் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நகைச்சுவை உலகின் மாமன்னன்! அன்புப் பங்காளி வடிவேலு அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியாகிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.







