போலியோ திட்டத்தை போல தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : மணீஷ் சிசோடியா

போலியோ திட்டத்தை போல கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில்லை என்ற முடிவை மத்திய…

போலியோ திட்டத்தை போல கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில்லை என்ற முடிவை மத்திய அரசு மார்ச் மாதத்தில் எடுத்திருந்தால், நாட்டில் 6.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும். தடுப்பூசி ஏற்றுமதி செய்ததற்கு சர்வதேச நாடுகளின் உறவு காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும் தடுப்பூசி ஏன் ஏற்றுமதி செய்யவில்லை? கொரோனா தடுப்பூசிகளை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மத்திய அரசு பெரும் தவறை செய்து விட்டது என மணீஷ் சிசோடியா கூறினார்.

தடுப்பூசிகளை பெற ஒவ்வொரு மாநிலமும் சர்வதேச டெண்டர்களை கோர வேண்டுமென்றால் இந்திய ஒன்றிய அரசின் பங்கு தான் என்ன? டெல்லிக்கு தேவையான தடுப்பூசிகளை அளிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது என தெரிவித்தார்.

ஒவ்வொரு மாநிலமும் அதற்கு தேவையான தடுப்பூசிகளை பெறுவதற்கு சர்வதேச டெண்டர்களை கோருமானால், இந்தியாவின் மதிப்பு என்னாவது? கொரோனா தடுப்பூசி விநியோகத்தின் தோல்வியை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏற்க வேண்டும் என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோதியா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.