சிறார்களுக்கு தடுப்பூசி; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் 3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.   இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்…

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் 3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 

இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் எனவு  தெரிவித்தது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2007ம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த அனைத்து சிறார்களும், ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும் எனவும், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு வரும் 1ம் தேதி தொடங்கும் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

கோவின் இணையதளம் அல்லது செயலியின் வாயிலாகவோ, தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்றோ முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும், முன்பதிவுக்கு ஆதார் அட்டை அல்லது பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய்கள் இருப்பவர்கள் ஜனவரி 10-ம் தேதி முதல் 3-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் இரண்டு தவணைகள், எந்த வகையான கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்களோ, அதே வகையான தடுப்பூசியைத் தான், 3-வது தவணையாகவும் செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் கழித்து, 3-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி 3-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்ந்த அனைத்து தடுப்பூசி மையங்களிலும் 3-வது தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.