முகக் கவசத்தை அணிவதால் மற்றவர்களைக் காப்பாற்ற முடியும்: தடுப்பூசி திருவிழா- பிரதமர் மோடி வேண்டுகோள்

இன்று முதல் நான்கு நாள்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நான்கு முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ள…

இன்று முதல் நான்கு நாள்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நான்கு முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,52,879 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,33,58,805 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 839 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை நான்கு நாளுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதுவரை நாடு முழுவதும் 10,15,95,147 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டிலிருந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி திருவிழா குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு முக்கியமான 4 வேண்டுகோள்களை விடுத்துள்ளார். ‘

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் எனவும், அனைவரும் முகக் கவசத்தை அணிவதால் மற்றவர்கள் காப்பாற்ற முடியும் என்றும் கூறினார். கொரோனா தொற்று பதிவான பகுதிகளைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக வகைப்படுத்த வேண்டும் எனவும் படிக்காத அல்லது குறைவாகப் படித்தவர்களுக்குத் தடுப்பூசி போட மற்றவர்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.