உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே கடந்த 16ம் தேதி டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் சென்ற பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது. அடுத்தடுத்து 8 பேருந்துகள் மற்றும் 2 சிறிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீ பற்றி எரிந்துள்ளது.
இந்த பயங்கர விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ள நிலையில் 90 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் விபத்தில் மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாமல் கருகி விட்டதால், மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
அந்த வகையில் 4 உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







