திங்களன்று உத்திர பிரதேசம், மதுராவில் உள்ள ஸ்ரீ ராதா ராணி ஆலயத்தில் “லட்டு மார் ஹோலி” விழா நடந்தது. இந்த விழாவில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட மக்கள் அனைவரும் எந்த ஒரு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பின்பற்றவில்லை. இதனால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று உத்தர பிரதேசத்தில் உள்ள “ஸ்ரீ ராதா ராணி” ஆலயத்தில் “லட்டு மார் ஹோலி” விழாவில் பங்கேற்ற மக்கள் யாரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற எந்த ஒரு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் இருந்தது மேலும் தொற்று பரவும் அபாய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

“லட்டு மார் ஹோலி” என்றால் என்ன?
“லட்டு மார் ஹோலி” என்பது பர்ஸனாவில் ஒரு புகழ்பெற்ற கொண்டாட்ட விழாவாகும். ஆண்டுதோறும் உத்தரபிரதேசம், மதுராவில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் சிறப்பம்சம் யாதெனில், அங்குள்ள பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் குச்சிகளாலும், பல வண்ணங்களாலும் ஆண்களைத் தாக்கி மகிழ்வதே ஆகும். மதுராவில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைத்து ஒரு சேரக் கூடி இறைவன் கண்ணனை வணங்கி மகிழ்வதே இந்த விழாவின் மற்றொரு சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்த விழாவைப் பற்றி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தில் வெளியான விடியோ காட்சியில் “கோயில் நிர்வாகிகள் சிலர் கோயிலின் மேல் தளத்திலிருந்து ஏராளமான லட்டுகளை மக்களை நோக்கித் தூக்கி எரிந்தனர்.” வீசப்பட்ட லட்டுகளை மக்களும் ஆர்வத்துடன் பிடித்துக்கொண்டனர். இந்த விழாவில் மிகச்சிலர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தனர் மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இவ்விழாவில் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி பேசிய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மக்களின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் இதுபோன்று கொரோனா தொற்று பரவலை அதிகரிக்கும் விதமான எந்த ஒரு விழாவிற்கும், நிகழ்விற்கும் வரும்காலங்களில் அனுமதி தரப்படமாட்டாது என்றார். விழா நடந்த திங்களன்று மாலை வெளியிட்ட செய்தியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 500க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் இத்தகைய நடவடிக்கைகள் கொரோனா தொற்று பரவுதலை அதிகரிக்கச் செய்யும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.







