தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தமிழ் வாழ்க என்று வண்ண விளக்குகளால் அலங்கரீக்கப்பட்ட பெயர் பலகை அமைக்கப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 வரை மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை அமைக்கப்பட்டது. ஆனால் 2011ம் ஆண்டு அதிமுக தலைமையிலான அரசு அமைந்த பிறகு தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை சரியாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக சென்னை மாநகராட்சி அலுவலக கட்டிடமான ரிப்பன் மாளிகையிலிருந்த தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை அகற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியினரும், தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், அதனை சரி செய்யவே தமிழ் வாழ்க பெயர் பலகை நீக்கப்பட்டதாகவும் அப்போதைய அதிமுக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெயர் பலகை மீண்டும் நிறுவப்படும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அரசு அலுவலக கட்டிடங்களில் பொறுத்தப்படிருந்த தமிழ் வாழ்க என்ற பெயர் பலகைகள் சரியான பராமரிப்பு இன்றியும், மிகவும் மோசமான பலகைகள் கட்டிடத்திலிருந்தும் நீக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆட்சி அமைந்த உடனே சென்னை மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என இரண்டு பெயர் பலகைகளை மீண்டும் நிறுவியது. இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் வாழ்க பெயர் பலகையை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு தலைமைச் செயலத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரீக்கப்பட்ட தமிழ் வாழ்க பெயர் பலகை நிறுவப்பட்டது. இதைப்போல அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் வாழ்க பெயர் பலகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







