அமெரிக்கர்கள் அனைவருக்கும் அளிப்பதற்கு போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால், உலகளவில் கொரோனாவல் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், அப்போதைய அதிபர் டிரம்பை தோற்கடித்து ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்றினார்.
தற்போது மக்களை கொரோனா பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால்தான் மக்களின் உயிர்களை காப்பாற்ற முடியும் எனக்கூறினார். மேலும், அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி செலுத்த போதுமான அளவுக்கு தடுப்பூசியை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







