தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனை தொழிலாளி மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜாவால் துப்பாக்கியால் சுடப்பட்டார். கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் மாநில அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் மணிகண்டனின் தந்தை பெருமாள் சேட், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, புதிய உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்பந்தப்பட்ட போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரிக்கும் தென்காசி துணை ஆட்சியர், காணொலி மூலம் நேரில் ஆஜராகினார். விசாரணை தொடர்பாக அவர் கூறுகையில், சம்பவ இடத்திற்கு சென்று முதல் கட்ட விசாரணை நடத்தினேன். தேர்தல் பணிகள் இருந்ததால், விசாரணையை முடிக்க இயலவில்லை. கால அவகாசம் வழங்கினால் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்து விடுவோம் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட துணை ஆட்சியர், விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 2 – ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.







