இந்தியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கத் தடை?

இந்தியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்காமல் இருப்பதற்கான சட்டத்திருத்தம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. S-400 என்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை 5 பில்லியன் டாலர் கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா…

இந்தியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்காமல் இருப்பதற்கான சட்டத்திருத்தம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

S-400 என்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை 5 பில்லியன் டாலர் கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா கடந்த 2018ல் மேற்கொண்டது.

ரஷ்யாவை எதிரியாகக் கருதும் அமெரிக்கா, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை மற்றும் உளவுத் துறையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்காக 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது.

CAATSA எனும் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி, ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்ட துருக்கிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இந்த அடிப்படையில், இந்தியாவுக்கு எதிராகவும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வந்தன.

எனினும், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்நிலையில், CAATSA சட்டத்தின் கீழ் இந்தியா மீது பொருளாதார் தடைகளை விதிக்காமல் தடுப்பதற்கான சட்டத்திருத்தம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனா போன்ற ஆக்கிரமிப்பாளர்களைத் தடுக்க உதவும் நோக்கில் ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு வாங்கப்பட்டிருப்பதால், இந்தியாவுக்கு எதிராக CAATSA-ஐ  பயன்படுத்த விலக்கு அளிக்க இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டத்திருத்தத்தின் மீது உரை நிகழ்த்திய உறுப்பினர் கண்ணா, சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.