பாமக 33 ஆண்டுகள் நிறைவு-கட்சியினருக்கு அன்புமணி எழுதிய கடிதம்

பாமக 33 ஆண்டுகளை நிறைவு செய்து 34ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய மடலில், இனி வெற்றி ஒன்றே நமது இலக்கா வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து…

பாமக 33 ஆண்டுகளை நிறைவு செய்து 34ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய மடலில், இனி வெற்றி ஒன்றே நமது இலக்கா வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டு அரசியல் பயணிக்கும் பாதையை தீர்மானிக்கும் சக்தியான பாட்டாளி
மக்கள் கட்சி, இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்து நாளை 34-ஆவது ஆண்டைத்
தொடங்குகிறது. இந்த நாளைக் கொண்டாட மிகவும் உற்சாகத்துடன் எனது சொந்தங்களாகிய நீங்கள் தயாராகிக் கொண்டிருப்பீர்கள் என்பதை அறிவேன். உங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமையும், பெருமையும் பாட்டாளி சொந்தங்களாகிய
நீங்கள் தான். அதிகாரத்தை சுவைத்த கட்சிகள் வலிமையாக இருப்பதும், அரசியலில்
ஆதிக்கத்தை செலுத்துவதும் சாதனை அல்ல. அதிகாரத்தை சுவைக்காமல் அரசியலை
தீர்மானிக்கும் சக்தியாக திகழ்வது தான் ஓர் அரசியல் கட்சிக்கு பெருமை; அது
தான் ஓர் அரசியல் கட்சியின் சாதனை. அந்த பெருமையும், சாதனையும் பா.ம.க.வுக்கு
உண்டு. அதை சாத்தியமாக்கியது பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் தான்.
இதை நான் பெருமையுடனும், பெருமிதத்துடனும் கூறுவேன்.

தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எதிராக முதன்
முதலில் குரல் கொடுத்து பாதிப்பை போக்குவது பாட்டாளி மக்கள் கட்சி தான்!

தமிழ்நாட்டில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை
வழங்கி, புதிது புதிதான திட்டங்களை செயல்படுத்த வைப்பதும் பாட்டாளி மக்கள்
கட்சி தான்! பொதுமக்களோ, தொழிலாளர்களோ, அரசு ஊழியர்களோ அவர்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் அதைத் தீர்ப்பதற்காக அவர்கள் முதலில் நாடி வருவது பாட்டாளி மக்கள் கட்சியைத் தான்!

மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமான யோசனைகளையும், திட்டங்களையும் மட்டும் தான்
பாட்டாளி மக்கள் கட்சி முன்வைக்குமே தவிர, பரபரப்பை ஏற்படுத்த வேண்டும்
என்பதற்காக சர்ச்சைகளை எழுப்புவதையோ, அவதூறு பரப்புவதையோ ஒருபோதும்
செய்ததில்லை… இனியும் செய்யாது!


தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சிக்கும் இந்த பெருமையும், சிறப்பும் கிடையாது.
இதற்கெல்லாம் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா
அவர்களின் தொலைநோக்கு பார்வையும், அவர் காட்டிய வழியில் கட்சியின்
வளர்ச்சிக்காக உழைக்கும் நம்மைப் போன்ற பாட்டாளி சொந்தங்களும் தான்.

தமிழ்நாட்டின் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு சமூகநீதி, கல்வி,
சுகாதாரம், விவசாயம், நீர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் நாம்
படைத்த சாதனைகளின் பட்டியல் மிகவும் நீளமானது.

ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடையும் இந்த
தருணத்தில் இந்த சாதனைகளை மட்டும் நினைத்து நாம் மனநிறைவடைந்து விட முடியுமா?

மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து இவ்வளவு நன்மைகளை செய்த நாம்,
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் இன்னும் பல மடங்கு நன்மைகளை செய்யலாமே?
ஆட்சியாளர்களுக்கு தெரிவிக்கும் அனைத்து யோசனைகளையும் நாமே செயல்படுத்தலாமே? ஒவ்வொரு ஆண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழா கொண்டாடப்படும் போதெல்லாம் நமது குல தெய்வம் மருத்துவர் அய்யா அவர்கள் இந்த வினாக்களைத் தான் முன்வைக்கிறார். நானும் அதே வினாக்களைத் தான் எழுப்புகிறேன். இந்த வினாக்களில் உள்ள நியாயங்களை நீங்களும் அறிவீர்கள்.

அதற்கான விடைகளை தேடுவதற்காகத் தான் பா.ம.க. 2.0 என்ற புதிய பயணத்தை
மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடன் நாம் தொடங்கியிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.