அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் போலீஸ் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடம் கேபிட்டல். இக்கட்டடத்தை நோக்கி வேகமாக மர்ம நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து அங்கு இருந்த பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதினார். அதன்பின் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார். இதில், வில்லியம் பில்லி இவான்ஸ் எனும் காவலர் உயிரிழந்தார். மற்றொரு அதிகாரி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் பதிலடி தாக்குதல் நடத்தி அந்த மர்ம நபரை சுட்டு கொன்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தாக்குதல் நடத்திய நபரின் அடையாளமோ அல்லது தாக்குதலின் நோக்கமோ இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்குப் பின்னால் எந்தவித தீவிரவாத பின்னணியும் இல்லை. அதேநேரத்தில் இந்த தாக்குதல் நடந்ததிற்கான நோக்கத்தை கண்டுபிடிக்க தீவிர விசாரனை நடந்து வருகிறது” என்றார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி வில்லியம் பில்லி இவான்ஸுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கேபிட்டல் கட்டடத்தில் அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஆதிகாரிகள் அனைவரும் கேபிட்டலை காக்க தனது உயிரை தியாகம் செய்த கேபிட்டல் காவல்துறை அதிகாரி வில்லியம் பில்லி இவான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்தனர்.







