6 மாத காலமாக காணாமல் போன தங்கையும், இரட்டை குழந்தைகளும்; ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த அண்ணன்!

சங்கரன்கோவிலை சேர்ந்த முருகராஜ், தனது தங்கை மற்றும் அவரது இரட்டை குழந்தைகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு பதிவு செய்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த முருகராஜ் என்பவர், உயர்நீதிமன்ற…

சங்கரன்கோவிலை சேர்ந்த முருகராஜ், தனது தங்கை மற்றும் அவரது இரட்டை குழந்தைகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த முருகராஜ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “எனது தங்கை வள்ளியம்மாள். சமீபத்தில் அவருக்கு மகன், மகள் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. வள்ளியம்மாளின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2023 ஜனவரி மாதம் 11-ம் தேதியிலிருந்து வள்ளியம்மாள் மற்றும் அவரது இரட்டை குழந்தைகளை காணவில்லை.

இதுகுறித்து சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது தங்கை வள்ளியம்மாள் மற்றும் அவரது இரட்டைக் குழந்தைகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிறந்து 90 நாட்களே ஆன இரட்டை குழந்தைகள் காணாமல் சென்று 6 மாதங்கள் ஆகிவிட்டது. 6 மாதங்களாக என்ன விசாரணை நடைபெற்று வந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் காணாமல் போன பெண்ணையும், அவரது இரட்டை குழந்தைகளையும் கண்டுபிடிக்கவில்லை என்றால் பதில் மனுவுடன் தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இந்த வழக்கு குறித்து தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.