டிசம்பரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கக்கூடிய நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது டிசம்பரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் வார்டு மறுவரையறை பணிகள், தேர்தல் அலுவலர்கள் நியமனம், வாக்குச்சாவடிகளை கண்டறிதல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி வருகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி 600-க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் மாத இறுதியில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு வார்டு மறுவரையறை பணிகள் முடிந்த பின், தனியாக தேர்தலை நடத்தவும் மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதேபோல மேயர், சேர்மன் பதவிகளுக்கு மறைமுக தேர்தலை நடத்தவும் முடிவு என தகவல் வெளிவந்துள்ளது. இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மதுரையில் அக்.24-ல் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.