யுபிஎஸ்சி தேர்வில் 6வது முயற்சியில் வெற்றி.. தந்தையின் கனவை நிறைவேற்றிய மகள்!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருணா. 5 குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்த அருணா முதலில் தேர்ந்தெடுத்த பாதை, பொறியியல் பட்டம் முடித்துவிட்டு சாதாரண வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான். ஆனால், அவரது வாழ்க்கை…

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருணா. 5 குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்த அருணா முதலில் தேர்ந்தெடுத்த பாதை, பொறியியல் பட்டம் முடித்துவிட்டு சாதாரண வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான்.

ஆனால், அவரது வாழ்க்கை அப்படி எளிதாக அமைந்துவிடவில்லை. 2009ஆம் ஆண்டு அவரது தந்தை உயிரை மாய்த்துக்கொண்டது அருணாவின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. மகள்களின் கல்விக்கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் தவித்த அந்த தந்தைக்கு, உயிரிழப்பை தவிர வேறு வழி தெரியாமல் போனதே அதற்கு காரணம்.
தனது பிள்ளைகள் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்ற தந்தையின் கனவை நிறைவேற்ற எண்ணினார் பொறியியல் பட்டதாரியான அருணா. இதன் காரணமாக 2014ஆம் ஆண்டு முதல் அவர் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதத் தொடங்கினார். சினிமாக்களில் வருவதுபோல அவ்வளவு எளிமையாக அருணா தேர்ச்சி அடையவில்லை. 5 முறை தேர்வு எழுதியும் வெற்றி கிடைக்கவில்லை.

ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து பின்வாங்காத அருணா, பெங்களூருவில் ஐஏஎஸ் அகடாமியை தொடங்கி, கிராமப்புற இளைஞர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்பதற்கு ஊக்குவித்து வருகிறார். இந்த சூழலில்தான், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியாயின. 5 முறை கிடைத்த தோல்விகளை பாடமாக்கிய அருணாவுக்கு, 6வது முறை வெற்றி கிடைத்தது. அவர் அகில இந்திய அளவில் 308வது இடம் பிடித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த அவர், இடஒதுக்கீட்டை பயன்படுத்த மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். விவசாயிகளுக்கு உதவுவதன் மூலம் இழந்த தமது தந்தையின் சிரிப்பை காணவேண்டும் என்பதே தனது லட்சியம் என புன்முறுவலுடன் கூறுகிறார் கர்நாடகாவின் சிங்கப்பெண் அருணா.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.