மணிமுத்தாறு காவலர்கள் சிறப்பு பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர் ஒருவர் திருமணமாகாத விரக்தியில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு 9 ம் மற்றும் 12 -ம் அணி சிறப்பு காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு போலீசார் உள்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்கள் உள்ளனர். மதுரை பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 29) என்பவர் மணிமுத்தாறு 12 -ம் அணி பட்டாலியனில் பயிற்சி காவலராக பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் தமிழ்செல்வன் கடந்த 5ம் தேதி திடீரென மணிமுத்தாறு பட்டாலியனில் உள்ள தனது அறையில் சென்று திடீரென உடலில் மண்ணெண்ணயை உற்றி தீக்குளித்து உயிரை மாய்த்து கொள்ள முயன்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் தமிழ்செல்வனை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவலர் தமிழ் செல்வன் திருமணமாகாத விரக்தியில் தீக்குளித்ததாக கூறப்படுகிறது. சிகிச்சையில் அவரது உடலில் 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







