நார்வேயை சேர்ந்த யோன் ஃபோஸ்-வுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள்ளது. இந்நிலையில் யார் இந்த யோன் ஃபோஸ் என்று பார்க்கலாம்.
ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது.மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த யோன் ஃபோஸ்ஸ-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் அவரின் புதுமையான நாடகங்களுக்காகவும் உரைநடைகளுக்காவும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு இலக்கியப் பரிசு பெற்ற யோன் ஃபோஸ் ‘ஃபோஸ் மினிமலிசம்’ என்று அழைக்கப்படும் ஒரு மிகச் சிறந்த பாணியில் குறுகிய நாவல்களை எழுதியுள்ளார். wakefullness (வேக்ஃபுல்நெஸ்), melancholia (மெலஞ்சோலியா), the other name (தி அதர் நேம்) உள்ளிட்ட புத்தகங்களுக்காக அதிக கவனம் பெற்றவர். குறிப்பாக, மூன்று நூல்களாக வெளிவந்த இவரின் septology (செப்டாலஜி) நாவலை மிகச்சிறந்த இலக்கிய ஆக்கமாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
விருது குறித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய யோன் ஃபோஸ்ஸ, “ விருதைப் பெருவதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் சற்று பயமாகவும் இருக்கிறது. மாற்றுக் கருத்திற்கு இடமில்லாமல் இது இலக்கியத்திற்காக வழங்கப்படும் முதன்மையான விருது” எனக் கூறியுள்ளார். 64 வயதான யோன் ஃபோஸ் 40 மேற்பட்ட நாடகங்கள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என இலக்கிய துறையில் பல பங்களிப்பைச் செய்திருக்கிறார்.







