இந்திய அரசியலமைப்பு வரலாற்றிலேயே முதல்முறையாக, பட்டியலினத்தை சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சர்களாகி இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை காமராஜபுரத்தில் பாஜக சார்பில், மக்கள் ஆசி யாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மக்கள் ஆசி யாத்திரை நடைபெறவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சமூக நீதியை போற்றுவதில் பாஜகதான் முக்கிய பங்காற்றுவதாகக் கூறினார்.
மேலும், இந்திய அரசியலமைப்பு வரலாற்றிலேயே முதல் முறையாக பட்டியலினத்தை சேர்ந்த 12 பேரை அமைச்சர்களாக மத்திய அரசு நியமித்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கோவை துடியலூரில், மக்கள் ஆசி யாத்திரை கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோவையில் பல பேருக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் நேரடியாக கிடைத்துள்ளதாக தெரிவித்தார். சமூக நீதியின் காவலர் மோடி தான் என கூறிய அவர், அனைத்து சமுதாயத்தினரும் கலந்த அமைச்சரவைதான், மோடி அமைச்சரவை என்றும் பெருமிதம் தெரிவித்தார்








