தனுஷ் நடித்து வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், ஆந்திராவில் ‘ரகுவரன் பி.டெக்’ என்ற பெயரில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ், முதன்முதலாக இயக்குநராக அறிமுகமான படம், ’வேலையில்லா பட்டதாரி’. இந்தப் படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்து, நடித்தார். இது அவருக்கு 25 வது படம்.
அமலாபால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக், சுரபி உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற அம்மா சென்டி மென்ட் பாடல் சூப்பர் ஹிட்டானது. அதோடு, வாட் எ கருவாட், ஊதுங்கடா சங்கு, வேலையில்லா பட்டதாரி ஆகிய பாடல்களும் வரவேற்பை பெற்றன. இன்றும் பலரது ப்ளேலிஸ்டில் இடம் பிடித்திருப்பவை இந்த பாடல்கள்.
நடிகர் தனுஷ், வேலையில்லாத பட்டதாரியாக நடித்திருந்திருந்தார். எளிமையான கதையும் யதார்த்தமான திரைக்கதையும் விவேக்கின் காமெடியும் ரசிகர்களிடையே இந்தப் படத்தைக் கொண்டு சேர்த்தன. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், தனுஷை சிறந்த பாடலாசிரியராகவும் பெருமைபட வைத்தது.
அதோடு இந்த படம் சர்ச்சையையும் சந்தித்தது. தனுஷ், சிகரெட் பிடித்து நடந்து வருவது, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றி படத்தில் இடம்பெற்ற வசனம் ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பின.இப்படம், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ‘ரகுவரன் பி.டெக்’ என்கிற பெயரில் வெளியானது. அங்கும் வசூலைக் குவித்தது.
இந்நிலையில், ஆந்திராவில் 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்படம் தெலுங்கில் இன்று மறுவெளியீடு செய்யப்பட்டது. காலைக் காட்சியுடன் ஆரம்பமான இப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.







