தூத்துக்குடி மாவட்ட அமலி நகர் மீனவர்களின் போராட்டம் 12 நாட்களாக நடைபெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தையை அடுத்து முடிவுக்கு வந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் 200 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றர். இந்நிலையில் கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்து தரக்கூரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து 2022ம் ஆண்டு சட்டப்பேரவை மீன்வளமானிய கோரிக்கையில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பணிகளும் நடைபெறாததால் மீனவர்கள் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சுமார் 200 படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1.50 கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 10-வது நாளாக மீனவர்கள் குடும்பத்துடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு தண்டோரா அடித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், தமிழ்நாடு அரசை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அதோடு போராட்டத்தின் 10-ஆவது நாளில் இருந்து தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
இதனை அடுத்து 11-ஆவது நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் தொடர்ந்து மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டம் நடத்திய மீனவர்களிடம் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், 12-ஆம் நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் மீனவர்கள் உடன் மீண்டும் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், தூண்டில் வளைவு பாலப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். அதோடு தூண்டில் பாலப் பணிகள் குறித்து மாதம் ஒருமுறை அறிக்கை அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து போராட்டத்தை முடித்துக் கொள்வதாக மீனவர்கள் அறிவித்தனர். அதோடு, வரும் திங்கள்கிழமை முதல் மீன்பிடித் தொழிலுக்கு செல்வதாக அறிவித்துள்ளனர்.