கிருஷ்ணகிரி அருகே தோட்டத்தில் மாடு மேய்க்க எதிர்ப்பு தெரிவித்ததால், பெரியப்பாவை அடித்து கொன்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் செம்படமுத்தூர் அருகே மிட்டபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் மாதேப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மாந்தோட்டத்தில் பல ஆண்டுகளாக காவலுக்கு இருந்து வருகிறார். இந்த நிலையில் பெருமாளின் உறவினரான அப்பாபுலி என்பவர் அந்த தோட்டத்தில் மாடுகள் மேய்த்து வந்துள்ளார். அப்போது தோட்டத்திலுள்ள கோழிகளையும் அவர் திருடி செல்வதாக கூறப்படுகிறது. இது குறித்து காவலாளி பெருமாள் தோட்டத்தின் உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து தோட்டத்தில் மாடுகள் மேய்க்க கூடாது என செல்வம் அப்பாபுலியை கண்டித்துள்ளார்.
இதனால் தனது பெரியப்பாவான பெருமாள் மீது அவர் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த அப்பாபுலி தோட்டத்தில் காவலுக்கு இருந்த பெருமாள் தலையில் கல்லை போட்டு கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் பெருமாள் வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது பெருமாள் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக பெருமாளை மீட்டு உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாக குடிபோதையில் அப்பாபுலி தனது பெரியப்பாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அப்பாபுலியை கைது சிறையில் அடைத்தனர்.







