நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையொரம் இருந்த சாலைகள் வீடுகள் வாகனம் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இது வரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து சுற்றுலா மற்றும் யாத்திரை சென்றவர்களில் சிலர் மீட்கப்பட்ட நிலையில் பலரும் காணாமல் போய் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஈஷா மையத்தில் இருந்து நேப்பாளத்திற்கு யாத்திரை சென்ற 80 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் கியிரோங் (Gyirong) பகுதியில் ஒரு பயங்கரமான மற்றும் துயரமான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது; இதில் எங்கள் கைலாஷ் யாத்திரைக் குழுக்களில் ஒன்று சிக்கிக்கொண்டது. அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது, குடியேற்றத் துறை அலுவலகத்தில் (immigration office) இருந்த வேளையில் இந்த வெள்ளம் ஏற்பட்டது; அந்த அலுவலகக் கட்டிடமும் நகரின் பெரும்பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியதாகத் தெரிகிறது.
தன்னார்வலர்கள் மற்றும் உதவிக் குழுவினர் உட்பட நாங்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் உள்ளோம்; மீட்புப் பணிகளில் உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். குடியேற்றத் துறை அலுவலகத்தில் இருந்தவர்களின் நிலை அல்லது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அந்த இடத்திற்குச் செல்ல முடியுமா என்று அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்; எத்தகைய ஆபத்து இருந்தாலும் மீட்புப் பணிகளில் பங்கேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எங்கள் யாத்திரையில் பங்கேற்ற 21 குழுக்களில், 495 பேர் ஏற்கனவே பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனர். தற்போது 743 பேர் திபெத்திலும், 148 பேர் நேபாளத்திலும் உள்ளனர்; 77 பேர் குடியேற்றத் துறை மையத்திலும், 3 தன்னார்வலர்கள் நேபாளத்தின் டிமுரே (Timure) பகுதியிலும் உள்ளனர்.
எங்கள் குழுவில் உள்ளவர்கள் மற்றும் இப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானோரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களே, உங்கள் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்; இந்த மிகக் கடினமான சூழலில் உதவ நாங்கள் எவ்வித முயற்சியையும் கைவிடவில்லை. தற்போதைய சூழலில் செய்யக்கூடிய சிறந்த உதவிகளை உறுதிசெய்ய நான் நேரில் அப்பகுதியில் இருக்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




