உக்ரைன் போர் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று நேட்டோ நாடுகளின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் இணைவதற்கான நடவடிக்கைகளை உக்ரைன் தீவிரப்படுத்தியதை அடுத்து, அந்நாட்டுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கியது ரஷ்யா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போர் தொடங்கி 4 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், ஜெர்மனி செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க், பல ஆண்டுகளுக்கு நீடிக்க உள்ள இந்த போரில் உக்ரைனுக்கான ஆதரவை தொடர மேற்குலக நாடுகள் தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கான ஆதரவை நாம் நிறுத்திவிடக் கூடாது என அவர் மேற்குலக நாடுகளை எச்சரித்துள்ளார்.
போருக்கான விலை மிகப் பெரியதுதான் என குறிப்பிட்ட ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க், அதேநேரத்தில் ரஷ்யா தனது ராணுவ இலக்குகளை அடைய அனுமதித்தால் அது ஏற்படுத்தும் பாதிப்பு போருக்கான விலையைவிட மிகப்பெரியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களையும், நவீன ஆயுதங்களையும் அளிப்பதன் மூலம் அந்நாடு தனது கிழக்குப் பகுதியை ரஷ்யாவிடம் இருந்து மீட்க முடியும் என்றும் போரில் வெற்றி பெற முடியும் என்றும் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் தெரிவித்துள்ளார்.
தனது ராணுவ இலக்குகளை அடைவதில் கடந்த சில மாதங்களாக ரஷ்யா நிதானமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தனது மிருகத்தனமான தாக்குதல் மூலம் உக்ரைனை நசுக்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் முயல்வதாக சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விமர்சித்துள்ளார்.
ரஷ்யா தனது தாக்கும் திறனை வேகமாக வளர்த்து வருவதாகக் குறிப்பிட்ட போரிஸ் ஜான்சன், தனது மண்ணை காப்பதற்கான உக்ரைனின் திறன் அதைவிட வேகமாக வலுப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மிக நீண்ட போரையும், அதன் விளைவுகளையும் எதிர்கொள்ள நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற போரிஸ் ஜான்சன், அந்நாட்டு அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.