மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஷ் கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதையடுத்து, தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்துள்ளார் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே.
பால்தாக்ரே விரும்பிய இந்துத்துவா ஆட்சியை ஏற்படுத்துவோம் என சூளுரைத்தபடியே, 33 சிவசேனா எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 சுயேட்சை எம்.எல்.ஏக்களுடன் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே முகநூல் வழியாக பேசினார். அதில், தன் மீது அதிருப்தி இருப்பின் நேரடியாக வந்து சொல்ல வேண்டும் என்றும், இவ்வாறு மறைமுகமாக அதிருப்தியை தெரிவிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தன்னுடைய ராஜினாமா கடிதம் தயார் நிலையில் உள்ளது எனக்கூறிய அவர், முதலமைச்சராக முதன் முறையாக பதவியேற்றபோது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ஆலோசனையின்படியே பதவியேற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
இறுதியாக தனக்கு பின்னர் சிவசேனாவை சேர்ந்த ஒருவர்தான் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிலையில், நேற்று இரவு அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி மும்பையின் தெற்கு பாந்தராவில் உள்ள தனது சொந்த இல்லத்தில் குடியேறினார்.
கடந்த 2019ல் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட்ட சிவசேனா 55 எம்எல்ஏக்களை வென்றெடுத்தது. பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் இல்லாத நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் மகா விகாஷ் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது சிவசேனா. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 144 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.