கோவை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்திய இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை அடுத்துள்ள விளாங்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக கோவில்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் விளாங்குறிச்சி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது,அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குhd பின் முரணாக பேசியுள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த விகாஸ் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வந்த் சூர்யா என்பதும், இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா, கஞ்சா ஆயில் 40 கிராம் மற்றும் மெத்தம்பேட்டமைன் போதை மருந்து 3 கிராம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
சமீபகாலமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மட்டுமல்லாது மெத்தம்பேட்டமைன் போன்ற உயர் ரக போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








