தனி இசை கலைஞர் To திரையிசை கலைஞர்; நட்சத்திரம் நகர்கிறது இசையமைப்பாளர் தென்மா பேட்டி

பா.ரஞ்சித் இசையமைக்கும் திரைப்படங்களில் பாடல்கள் மற்றும் இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில் நாடகக் கலையை மையப்படுத்திய காதல் கதையை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு இசையமைத்துள்ளார் தென்மா. இரண்டாம்…

பா.ரஞ்சித் இசையமைக்கும் திரைப்படங்களில் பாடல்கள் மற்றும் இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில் நாடகக் கலையை மையப்படுத்திய காதல் கதையை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு இசையமைத்துள்ளார் தென்மா. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தென்மா. போத்தனூர் தபால் நிலையம் உள்ளிட்ட சில படங்களே இசையமைத்திருந்தாலும், கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக மாறியுள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் குறித்தும், தனது இசைப் பயணம் குறித்தும் நட்சத்திரம் நகர்கிறது இசை அமைப்பாளர் தென்மா சுவாரஸ்ய பகிர்வு….

உங்களுடைய இசைப் பயணம் குறித்து சொல்லுங்கள்?

சினிமாவில் இரண்டு, மூன்று படங்கள் பண்ணியுள்ளேன். முதல் படம் நீலம் தயாரிப்பில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. அடுத்ததா ‘போத்தனூரில் ஒரு தபால் நிலையம்’ ன்னு ஒரு படம் பண்ணுனேன். அது ரிலீஸ் ஆச்சு. ஒரு ஆந்தாலஜி படம் வொர்க் பண்ணுனேன். அதன்பிறகு வெங்கட் பிரபு தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆந்தாலஜி படமான ‘ SONY- யில் ரிலீஸ் ஆச்சு. அதற்கு அப்புறம் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் வரும் 31-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பா.ரஞ்சித் தயாரித்த படத்தில் பணியாற்றியதற்கும், தற்போது இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தில் பணியாற்றியதற்கும் என்ன வித்தியாசம் பாக்குறீங்க?

பா.ரஞ்சித் தயாரிப்பாளராக பெரிதாக தலையிடமாட்டார். மற்றவர்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பார். நம்முடைய படைப்பாற்றல்களுக்கு சுதந்திரம் கொடுப்பார். சில நேரம் அவருக்கு சில பாடல்கள் பிடிக்காது. நான் இசையமைத்த ஏதாவது ஒரு பாடல் பிடிக்கவில்லை என்றால் உடனே சொல்லிவிடுவார். நீ நம்புகிறாயா என்று கேட்பார். நம்புகிறாய் என்றால் ஓகே என்று சொல்லிவிடுவார். அவர் அப்படி சொல்வது எனக்கே ரொம்ப பெரிதா தோணும்.

இயக்குனராக இருக்கும்போது அவருடைய எழுத்து என்பதால், இன்னும் கொஞ்சம் Focus இருக்கும், Work இருக்கும். இருவருக்கும் இடையே நேரடி உரையாடல்கள் நிறையவே இருக்கும்.

 பா.ரஞ்சித்துடன் தான் முதல் படம் பண்ண வேண்டும் என்று நினைத்தீர்களா?

அப்படி நினைக்கவில்லை. நான் ரொம்ப வருஷமா independent இசையமைப்பாளராக இருந்தேன். நான் முன்பு சினிமாவில் முயற்சி செய்தேன். இரண்டு, மூன்று படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், பெரிதாகசப்போர்ட் இல்லாததால் விட்டுவிட்டேன். independent இசையமைப்பாளராக நிறைய வேலை பார்த்தேன். இதில் நல்ல சூழலும் இருந்தது.

ஒருநாள் ரஞ்சித் என்னை அழைத்து சினிமாவில் ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். நான், சினிமாவில் ஆசை உள்ளது, ஆனால் எனக்கு ஒரு சுதந்திரம் வேண்டும் என்று சொன்னேன். ஓகே நீ யோசித்து சொல்.. நீ சினிமாவுக்கு வந்தால் நல்லா இருக்கும்னு சொன்னார். பிறகு அவராக ஒரு நாள் உன்னால் முடியும் என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தி பண்ண வைத்தார். நான் சினிமாவில் கஷ்டம் என்று விட்டுவிட்டேன். கஷ்டம் என்று சொல்வதை விட எனது மியூசிக்கை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளுமா என்று கொஞ்சம் தயங்கினேன்.

நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் சேலஞ்சா எதிர்கொண்ட விஷயங்கள்?

இது தியேட்டர் குரூப்ஸ் பற்றிய படம். அதனால், நடிகர்கள் ஸ்கிரீன்ல அதிகமா நடிக்கும் காட்சிகள் வரும். அவர்கள் நடிப்பது மற்ற சினிமாக்கள் போன்று இல்லாமல் தியேட்டர் ஆக்டிங் ஆக இருக்கும். அதற்கேற்ப இசை அமைக்க வேண்டும். இதை செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தது. அதேநேரம், இந்த படத்தின் background music-ஐ மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்துடன் ஒப்பிடுகையில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் இசையில் என்ன வித்தியாசத்தை எதிர்பார்க்கலாம்?

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ திரில்லர் மாதிரியான படம். அதில் ஆக்சன், ட்ராமா எல்லாம் இருக்கும். இரும்புக்கடை சத்தம், உலகப்போர் காட்சிகள் இருக்கும். ஆனால் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் இளைஞர்கள் பற்றிய படம். மெஜாரிட்டி அவங்க தான் இருக்காங்க. அதனால், அவர்கள் அவர்களின் வாழ்வியலில் அவர்கள் அதிகம் கேட்கும் சத்தங்கள் இருக்கும். இரண்டு படங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் “டார்க் கலர்ஸ்”… ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் “பிரைட் கலர்ஸ்”

நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது குறித்து ?

முதல்முறையாக இதுபோன்ற படம் வருவதால் மக்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாகவே இருக்கிறது. சமூக வலைதளங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த படத்தைப் பற்றிய விவாதம் எப்படி இருக்க போகிறது என்ற ஆர்வமும் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு இன்னசென்டான காதல் கதை பற்றிய படம்தான். முதல்முறையாக இப்படி ஒரு படம் வருவதால் ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. போகப் போக , இதுபோன்ற படங்களுக்கு ‘யு’ சான்றிதழ் கிடைக்கலாம். நட்சத்திரம் நகர்கிறது’ படம் முதல் முயற்சி என்பதால், இதனை வரவேற்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

‘Independent music’ ஆல்பம் தொடர்ந்து பண்ணுவீர்களா?

அடுத்த மாதமே எனது அடுத்த ஆல்பம் வெளி வந்துவிடும். ஆல்பம் சாங் ஒரு பக்கம் போய்க் கொண்டே இருக்கும். சர்வதேச அளவில் இரண்டு தமிழ் மியூசிக் ஆல்பம் செய்து வருகிறேன். ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து என இரண்டு ப்ராஜெக்ட் பண்ணுகிறேன். சினிமாவிற்கு இசையமைப்பது ஒரு உலகம். ஆல்பம் சாங் செய்வது வேறொரு உலகம். இரண்டுமே தொடரும்.

புத்தகம் வாசிப்பது, பிடித்த புத்தகம் குறித்து ?

‘Man’s search for meaning’ என்னை மிகவும் பாதித்த புத்தகம். அதே போல் 8 ஆண்டுகளுக்கு முன்பு பிடித்த ‘Art of line’ புத்தகத்தை தற்போது மீண்டும் படித்தேன்.

சினிமாவில் அடுத்தடுத்த ப்ராஜெக்ட் பற்றி?

நிறைய விவாதங்கள் போய்க் கொண்டிருக்கிறது. இரண்டு படங்கள் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளன.

உரையாடல்: வந்தனா முத்துசாமி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.