ஓசூர் அருகே, தளி ஏரியில் தஞ்சமடைந்துள்ள இரண்டு காட்டு
யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
ஓசூர் அருகே வனப்பகுதிகளிலிருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தளி
ஏரியில் நேற்று காலை முதல் தஞ்சம் அடைந்துள்ளன. மேலும், யானைகள் கிராமப்
பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து விடுமோ, என்ற அச்சம் காரணமாக
வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், யானைகளை
பார்க்க கிராம மக்கள் திரண்டதால், தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்
மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்பொழுது சுட்டெரித்து வரும் கோடை வெயிலுக்கு வனவிலங்குகள் நீர் நிலைகள்
மற்றும் உணவு தேடியும் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி விடுகின்றன. இந்நிலையில், இரண்டு காட்டு யானைகள் தளி ஏரியில் ஆனந்த குளியல் போட்டு விளையாடி வருகிறது. வனத்துறையினரும் காவல்துறையினரும் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதுடன், யானைகள் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகாதவாறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், யானைகளை மாலை நேரங்களில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட
வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். பொதுமக்கள் ஆர்வத்தில் யானை இருக்கும்
பகுதிக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென, வனத்துறையினர் பொதுமக்களுக்கு
எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து, ரேஞ்சர் சுகுமார் தலைமையில்
15க்கும் மேற்பட்டவர்கள் யானையை கண்காணித்து வருகின்றனர்.
-கு. பாலமுருகன்







