செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியில் கழிவுநீர் வாகன உரிமையாளரை மிரட்டி லஞ்சம் கேட்கும் காவலரின் ஆடியோ வெளியாகி உள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவின் பேரில் இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கழிவுநீர் வாகன உரிமையாளர் ஆனந்திற்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில்,
கழிவு நீர் வாகனம் சோதனை சாவடி அருகே நிற்கிறது என்றும், உங்கள் பெயர் என்ன ? எந்த ஊர்? என்று வாகன உரிமையாளர் ஆனந்திடம் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அவற்றிற்கு பதில் கூறிவிட்டு, நீங்கள் யார்? என்று கேட்டபோது ’நான் போலீஸ் பேசுகிறேன்’ என கூறியுள்ளார்.
செல்போனில் தொடர்பு கொண்ட போலீசார் ஆனந்தை நேரில் வருமாறு அழைத்துள்ளார். எதற்கு? ஏதேனும் பிரச்னையா? என ஆனந்த் வினவியபோது, அதிகாரிகளை பார்க்குமாறும், இரண்டு வருடமாக தங்களை கவனிக்காமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனந்த் காவலர்களின் பெயர் கேட்டபோது இளவரசன், நிர்மல் எனவும் ஆனந்த் வீட்டின் அருகிலேயே நிற்பதாகவும் போலீசார் கூறியுள்ளார்.
மேலும் ஊரின் ஒதுக்கு புறத்தில் இருப்பதால் எந்த ஸ்டேசனுக்கும் கப்பம் கட்டத்தேவையில்லை; கழிவு நீர் வண்டியை வைத்து சம்பாதித்து கொள்கிறாய்? இதனை பார்க்கும் நான் என்ன பைத்தியக்காரனா? நான் நினைத்தால் ஆர்.டி.ஓ விடம் உன்னை மாட்டிவிட முடியும் என்று ஆனந்திடம் காவலர் நிர்மல் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்து தங்களை பார்த்துவிட்டு , வாகனத்தை எடுத்துச்செல்லுமாறு காவலர் இளவரசன் கூறி அவரது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, காவலர்கள் பேசிய ஆடியோ குறித்து தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் பரப்பாக பேசப்பட்டது. காவலர்களின் அத்துமீறல் குறித்து சமூக ஆர்வலர்களிடயே கருத்துகள் எழுந்து வந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவின் பேரில் இரு காவலர்களான இளவரசன் மற்றும் நிர்மல்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.







