நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு கார் விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து விசாரிப்பதற்காக, ராசிபுரம் காவல் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தன், காவலர் நந்தகோபால் ஆகியோரும், இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகர், பழனி, காவலர்கள் தேவராஜன், மணிகண்டன் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று மேற்படி கார் விபத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டு விசாரணை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு அதிகாலை சுமார் 2 மணி அளவில் அதிவேகமாக வந்த டிராவல்ஸ் வேன் ஒன்று அவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் தேவராஜன் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு காவலர் மணிகண்டன் மற்றும் டிராவல்ஸ் வேனில் பயணம் செய்த 3 பேர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொலைபேசியில் தொடர்பு கொண்டு இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் தேவராஜன் ஆகியோரின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் மற்றும் காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் பி.தாமரைக்கண்ணன் ஆகியோரை நேரில் சென்று உயிரிழந்த காவலர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தவும், அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா இருபத்தைந்து இலட்சம் ரூபாய் வழங்கிடவும், அவர்களது குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும், இவ்விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு உயர்தர சிகிச்சை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
-ம.பவித்ரா








