வாட்ஸ் அப்பில் போலி கணக்குத் தொடங்கி, தனது புகைப்படத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பல் குறித்து மாவட்ட ஆட்சியர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ். இவரது புகைப்படத்தைப் பயன்படுத்தி போலியான வாட்ஸ்-அப் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டும், இணையதள லிங்கை அனுப்பி வைத்தும் அவர் பெயரில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், தனது புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு வரும் செய்திகளை நம்ப வேண்டாம். மற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு நடந்தது போன்று தற்போது தனது புகைப்படத்தை வைத்தும் மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவகின்றனர். எனவே இதை யாரும் நம்ப வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக திருவள்ளூர் சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பெயரில் இந்த சைபர் கிரைம் கும்பல் பண மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா







