சென்னையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை பெருங்குடி காமராஜர் நகரில் (கிரீன் ஏக்கர்ஸ்) தனியார் அடுக்குமாடி
குடியிருப்பில் கழிவுநீரை நல்ல நீராக மாற்றுவதற்காக கடந்த 5 வருடங்களாக
பி.டெக், கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள சரவணன் என்பவர் குத்தகைக்கு
எடுத்துள்ளார். நேற்று மாலை 15 அடி அகலம் 15 அடி நீளம் கொண்ட சுமார் 20 அடி ஆழமுள்ள கழிவுநீர்த் தொட்டியை சென்னை ஆவடியைச் சேர்ந்த பெரியசாமி (38), திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி (38) ஆகிய இருவரும் சுத்தம் செய்துள்ளனர். அப்போது, சிறிது நேரத்தில் விஷவாயு தாக்கியதால் சப்தம் போட்டுள்ளனர். கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியவர்களின் சப்தம் கேட்டதால் ஓடி வந்து பார்த்தபோது மயங்கியிருந்த இருவரையும் மீட்டனர்.
அதில், பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த தட்சிணாமூர்த்தியை மீட்டு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். சிறிது நேரத்தில் தட்சணாமூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று
இருவரின் உடலையும் கைப்பற்றி சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது மனிதர்கள் பலர் உயிரிழக்கும் சோக
சம்பவம் அரங்கேறி வருவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








