கொரோனா தடுப்பூசி 95 சதவீத பாதுகாப்பை தருகிறது என தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துக்கான நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் பேட்டியளித்துள்ள வி.கே.பால் கூறியதாவது:
“இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் நாட்டின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது அலையில் டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தபோது இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 1,17,525 போலீசாரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களில் 17,059 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. அவர்களில் 20 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். ஒரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட 32,792 போலீசாரில் 7 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இரு தவணை தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட 67,673 போலீசாரில் நான்கு பேர் மட்டுமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
ஒரு தவணை தடுப்பூசி போட்டு கொண்டால் கொரோனா தொற்று பரவலில் இருந்து 82 சதவீத பாதுகாப்பை பெறமுடிகிறது. இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 95 சதவீத பாதுகாப்பைப் பெற முடிகிறது. குறிப்பாக டெல்டா வகை கொரோனா தாக்கத்தில் இருந்தும் தடுப்பூசி பாதுகாப்பை தருகிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.”
இவ்வாறு வி.கே.பால் கூறியுள்ளார்.