ஜெய்பீம் திரைப்படம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யாவுக்கு இரண்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக பாமக தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சூர்யா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாமகவினர் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து சென்னை தியாகராய நகர், ஆற்காடு தெருவிலுள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ஆயதப்படையை சேர்ந்த காவலர்கள் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவிற்காக பிரத்யேகமாக 2 ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சூர்யா தனது சொந்த விஷயம் மற்றும் அலுவலக காரணங்களுக்காக எங்கு சென்றாலும் 2 ஆயுதம் ஏந்திய போலீசார் உடன் இருந்து அவருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








