விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டும் தவெக அரசு – மு.க. ஸ்டாலின் கண்டனம்…!

தவெக அரசு தங்களை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றசாட்டுத் தெரிவித்துள்ளார்.

மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இக்குற்றசாட்டை மறுத்த அமைச்சர், தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாக விளக்கமளித்தார்.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக மாணவர் அணி சார்பில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!

த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!

இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!

அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!

“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.