சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் கடந்த 5ம் தேதி மதியம் 12.52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மலைப்பகுதியான இந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டத் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.
இதனால், பல பகுதிகளில் நில சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. நில சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
நிலநடுக்கத்திற்கு பின்னர் அருகேயுள்ள பல பகுதிகளில் தொடர் அதிர்வுகளும் உணரப்பட்டு உள்ளன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் ரிக்டரில் 3.0 அளவிலான மொத்தம் 10 நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. நிலநடுக்கம் எதிரொலியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 1900க்கும் மேற்பட்ட அதிகாரிகள், போலீசார், ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியர்வகள் பலரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.








