மருத்துவப்படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்த்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு , தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 28 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. மாணவர்கள் http://www.tnhealth.tn.gov.in, http://www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 12 ஆம் தேதியான இன்றுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.
மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 16 ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை தேசியத் தேர்வு முகமை வெளியிடாமல் இருப்பதால் கலந்தாய்வு நடைபெறும் தேதி குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் இன்று (ஜூலை 12 ) மதியம் 2 மணி வரையில் 38 ஆயிரத்து 849 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் கடந்தாண்டு 36 ஆயிரத்து 206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். கடந்தாண்டைவிட 2639 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி வெளியிட்டுள்ள அரசாணையில், மருத்துவப்படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் 2016-17 ஆண்டிற்கு பின்னர் உயர்த்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில் அரசு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணம் 2023-24 ம் கல்வியாண்டு முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.
அதன்படி எம்பிபிஎஸ் படிப்பிற்கு கல்விக்கட்டணமாக 6000 ரூபாய், சிறப்பு கட்டணமாக 2000 ரூபாய், பல்கலைக் கழக கட்டணமாக ஜிஎஸ்டி உட்பட 7473 ரூபாய் நிர்ணயம் உட்பட ரூ.18,073 , பிடிஎஸ் படிப்பிற்கு கல்விக்கட்டணமாக ரூ.4000, சிறப்பு கட்டணமாக ரூ.2000, பல்கலைக் கழக கட்டணமாக (ஜிஎஸ்டி உட்பட)ரூ.7473 உட்பட ரூ.16,073 என அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
எம்டி, எம்எஸ் படிப்பிற்கு கல்விக்கட்டணம் ஏற்கனவே ரூ.30 ஆயிரமாக இருந்ததை உயர்த்தி ரூ.40 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு கட்டணம் ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிஎம்.,எம்பிஎச் படிப்பிற்கு கல்விக்கட்டணத்தை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தியும், சிறப்பு கட்டணமாக ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை தேசியத் தேர்வு முகமை வெளியிடாமல் இருப்பதால் கலந்தாய்வு நடைபெறும் தேதி குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் ஒவ்வொரு சுற்றும் முடிந்தப் பின்னர் கடந்தாண்டில் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்தாண்டில் மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்ப்பதற்கான கலந்தாய்வில் மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.







