கோவையில் வருமானவரித்துறை அதிகாரிகள் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் செந்தில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான அலுவலகத்திற்கு வருமானவரித்துறையினர் ஏற்கனவே வைக்கப்பட்ட சீலை அகற்றி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையானது இரண்டாவது முறையாக நடைபெற்று வருகிறது. அதேபோல ராமநாதபுரம் பகுதியில் உள்ள பில்டிங் ஒப்பந்ததாரர் அருண் என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல, கோவை காந்திபுரத்தில் இருக்கும் கிஸ்கால் இரும்பு கம்பி அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கிஸ்கால் இரும்பு கம்பி உரிமையாளர் கண்ணப்பன், திமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கட்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகன் திருமலை ராஜ், திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.
இந்த சோதனைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருடன் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், முழு பாதுகாப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வருமானவரித்துறை சோதனை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







