யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின்!

மதுக்கரை நீதிமன்றத்தில் யூடியூபர் டி.டி.எப்.வாசன் நேற்று சரணடைந்த நிலையில், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரபல யூடியூபரான டி.டி.எஃப்.வாசன், கிட்டத்தட்ட 152 கிலோமீட்டர் வேகத்தில் தான் பைக் ஓட்டுவதையும்,…

மதுக்கரை நீதிமன்றத்தில் யூடியூபர் டி.டி.எப்.வாசன் நேற்று சரணடைந்த நிலையில், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரபல யூடியூபரான டி.டி.எஃப்.வாசன், கிட்டத்தட்ட 152 கிலோமீட்டர் வேகத்தில் தான் பைக் ஓட்டுவதையும், இவருக்கு பின்னால் அமர்ந்துள்ள மற்றொரு யூடியூபரான ஜி.பி.முத்து ஹெல்மெட் அணியாமல் பயத்தில் அலறுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகளை யூடியூபில் இருந்து நீக்குவதுடன் இதுபோன்ற வீடியோ வெளியிடுபவர்கள் மீதும் காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டுமே தவிர தவறான செயல்களை பிரபலங்கள் ஊக்குவிப்பதைப்போல நடந்து கொள்ளக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிவேகமாக வாகனத்தை இயக்கியதற்காகவும், மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்கியதற்காகவும் போத்தனூர் காவல்துறையினர் டி.டி.எஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவர் அண்மையில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வீடியோ செய்தி – https://www.youtube.com/watch?v=Lki4xG5UPZY

இந்நிலையில் நேற்று யூடியூபர் டி.டி.எஃப் வாசன் மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இரண்டு நபர்கள் உத்தரவாதம் கொடுத்ததனை அடுத்து மாலை அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.