“True RCB Fan”: தேர்தல் பிசியிலும் ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்த சித்த ராமையா..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா கண்டு ரசித்தார். கர்நாடக…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா கண்டு ரசித்தார்.

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் 10- ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க, காங்கிரஸ் கட்சி பல்வேறு புது வியூகங்களை வகுத்து வருகிறது.

இதன் முதற்கட்டமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி 124 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இன்னும் 100 பேரின் பட்டியல் எஞ்சியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் மைசூரு மாவட்டம் வருனாவில் சித்தராமையா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கட்சி தலைமையிடம் கேட்டு அவர்களின் அனுமதிக்காக காத்துள்ளார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான 16-வது ஐபிஎல் போட்டி கடந்த 31ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்கும் 16வது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெறுகிறது. அதன்படி 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் நாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.

நேற்று கர்நாடக மாநிலம்,  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சிறப்பான பேட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபி அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியை காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா கண்டு ரசித்தார். அவருடன் இணைந்து விதான் பரிஷத் சபாநாயகர் பசவராஜ் ஹோரட்டியும் போட்டியை பார்த்து மகிழ்ந்தார். தீவிர கிரிக்கெட் ரசிகரான சித்தராமையா, தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து கொண்டு மைதானத்தில் அமர்ந்து போட்டியை கண்டு மகிழ்ந்தார். மேலும் சித்தராமையா ஆர்சிபி ரசிகர் என்பதால், நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு, RCB எனது பெருமைமிக்க அணி. என்னைப் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசை RCB வெல்ல வேண்டும் என்பதுதான். இன்றோ நாளையோ ஐபிஎல் கோப்பையை நாங்கள்தான் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஒரு கன்னடர் என்ற முறையில் எனது ஆதரவு எப்போதும் ஆர்சிபிக்குத்தான் என்று ட்வீட் செய்த சித்தராமையா, அவர் போட்டியைப் பார்க்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/siddaramaiah/status/1642564660556595203?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.