ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பணத்தினை பதுக்கி வைத்தவர்களுக்கு கஷ்டம் என்றும், பொதுமக்களுக்கு மகிழ்ச்சி என்றும் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்து அவரே இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் காவ்யா தாபர் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, யோகிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் உள்ள திரையரங்கில் ’பிச்சைக்காரன் 2’ படத்தை காண வந்தவர்களை சந்தித்து விஜய் ஆண்டனி நன்றி தெரிவித்தார். இந்த வெற்றியை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். ரசிகர்களுக்காக, ’நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா’ என்ற பாடலை விஜய் ஆண்டனி பாடினார். மேலும் விரைவில் பிச்சைக்காரன் 3 வெளியாகும் என ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பணத்தினை பதுக்கி வைத்திருப்பவர்கள் வறுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என்று பதிலளித்தார்.







