திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதிலும் 1,15,736 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 1,28,01,785 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் இரவில் மட்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரை பஞ்சாபில் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது திரிபுரா முதல்வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். அனைவரும் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’ என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.







