முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜாவீத் பஜ்வா தன்னை கொலை செய்ய முயன்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பகிரங்மாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆட்சியை இழந்தார். அவரது தலைமையிலான கூட்டணியில் இருந்து, முக்கியக் கட்சி பிரிந்து, எதிர்கட்சியுடன் இணைந்ததால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனிடையே ஆட்சி கவிழும் முன்பே தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
ஆட்சி கவிழ்ப்பை தொடர்ந்து நவாஸ் சரீபின் சகோதரரான ஷெபாஸ் சரீபின் தலைமையிலான கூட்டனிக் கட்சி ஆட்சியமைத்து. பாகிஸ்தானில் ஆளும் கட்சி ஊழலில் திளைத்து விட்டதாகவும், எனவே தனது கட்சித் தொண்டர்கள் ஆட்சிக்கு எதிராக போராட வீதிக்கு வருமாறு இம்ரான் கான் பகிரங்க அழைப்பு விடுத்தார். இதனிடையே இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் போல் செய்தி நிறுவனத்திற்க்கு பேட்டி அளித்த இம்ரான் கான் நாட்டில் அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்த போதும், ஆட்சி மாறிய பின்னரும் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் கமர் ஜாவீத் பஜ்வா தன்னை கொலை செய்ய முயன்றதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பிடிஐ கட்சி நடத்திய ஆசாதி பேரணியின் போது மூன்று முறை இம்ரான் கானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், அதேபோல கடந்த நவம்பர் மாதம் 3ம் தேதி குஜ்ரன்வாலாவில் தனது கட்சி முகாமிற்கு அருகே இம்ரானை கானை நோக்கி ஒருவர் சுட்டதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதையும் போல் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த கொலை முயற்சியில் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் கமர் ஜாவீத் பஜ்வாவிற்கு தொடர்பு உள்ளதாகவும், ஆட்சி மாறியதால் முன்னாள் இராணுவத் தளபதி குறித்த விவகாரத்தை பொது வெளியில் தெரிவிக்க வேண்டாமென ஆட்சியில் இருப்பவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெனரல் பஜ்வா செய்த குற்றத்தை தன்னால் ஒருபோதும் வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது என திட்டவட்டமாக அந்த நேர்காணலில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி மீதான இம்ரான் கானின் குற்றசாட்டுகள் பாகிஸ்தான் அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







