திருச்சி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே.உடையாப்பட்டி மற்றும் ஆளிப்பட்டியை
சேர்ந்த நண்பர்கள் நாகரத்தினம், ஜயப்பன், மணிகண்டன், முத்தமிழ்செல்வன் மற்றும்
பில்லூர் தீதையாளன் ஆகியோர் கார் ஒன்றில் கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடித்துவிட்டு பழனி அருகேயுள்ள கனக்கம்பட்டியில் வழிபாடு செய்துவிட்டு ஊர் திரும்பியுள்ளனர்.
கார், மணப்பாறைக்கு முன்னதாக திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்
கல்கொத்தனூர் பிரிவு அருகே சென்றபோது, காரின் டயர் வெடித்துள்ளது. இதில் கார்,
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுதிசை வரை சென்றுள்ளது. அப்போது, எதிர்திசையில் திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சுமார் 70 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்தினை ஓட்டுனர் நிறுத்த முயன்ற நிலையில் பேருந்து காருடன் சேர்ந்து
அருகிலிருந்த 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற கழிந்தது. இந்த விபத்தில் காரில்
பயணித்த 5 பேரும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்
பேருந்தில் பயணித்த ஓட்டுனர் ராஜேந்திரன், நடத்துனர் பிரகாஷ் உள்ளிட்ட
43 பயணிகள் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ சென்ற போலீஸார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.







