திருச்சி மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு கொட்டித் தீர்த்த மழையால் கோடை வெயில் தணிந்து இதமான காலநிலை நிலவியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் இந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.மத்திய மாவட்டமான
திருச்சியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பகல் நேரங்களில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் இரண்டு மாத வெயிலுக்கு பின்னர் நேற்று வெப்பசலனத்தின் காரணமாக மழை வெளுத்து வாங்கியது. பல நாட்களுக்கு பிறகு பெய்த மழையினால் வெப்பம் தணிந்து இதமான காலநிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான மணச்சநல்லூர், நொச்சியம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. சிறுவர்கள் கீழே விழுந்த ஆலங்கட்டிகளை எடுத்து விளையாடி மகிழ்ந்தனர். அதே நேரம் சில இடங்களில் இடி, மின்னலுடன் சூறைகாற்று வீசியதால் ஏராளமான இடங்களில் நடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.







