டெல்லி மக்கள் நீதிமன்றத்தின் முதல் அமர்வில் திருநங்கைகள், திராவக தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் விதமாக மக்கள் நீதிமன்றம் (Lol Adalat) முறை செயல்பாட்டில் உள்ளது. அதன்படி டெல்லி நீதிமன்றத்தில் இந்த ஆண்டுக்கான முதல் மக்கள் நீதிமன்ற அமர்வு நடந்துள்ளது. அதில் தான் திருநங்கைகள், திராவக தாக்குதலுக்குள்ளானவர்கள் போன்றவர்கள் இணை உறுப்பினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் இறுதியாண்டு படிக்கும் திருநங்கை ராகவி கூறுகையில், “நீதிபதியுடன் இணைந்து மிக முக்கியமான அமர்வில் கலந்து கொண்டேன். திருநங்கைகளுக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இது வழக்கமான சிந்தனைகளில் இருந்து எங்களை மாறுபட்ட தளத்துக்கு உந்தி செல்லும்.” என்று கூறியுள்ளார்.
இணை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டவர்கள், இந்த வழக்குகளில் தீர்வு காண உதவி புரிவார்கள். “பொதுவாக மக்கள் நீதிமன்றத்தில் சிவில், திருமணம் தகராறு, குற்றவியல் சார்ந்த வழக்குகள் தான் அதிகம் விசாரிப்போம். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தமுறை கிட்டத்தட்ட 2 லட்சம் வழக்குகளுக்கு தீர்வுக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளோம். ஒரு மாற்றத்துக்காக தான் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களை இதற்கு பயன்படுத்தியுள்ளோம்.” என்று மாவட்ட நீதிபதி முகேஸ் குமார் குப்தா கூறியுள்ளார்.
திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட சில பெண்கள், “சமூகத்தில் எப்படி இந்த முகத்தை வைத்துக் கொண்டு வாழ்வது என்று யோசித்தோம். நீதிபதி அவர் அருகிலேயே அமர சொன்ன போது எங்களால் நம்ப முடியவில்லை. ஆங்கிலம் தெரியாது என்று கூறியபோது கூட, நீதிபதி மிகவும் பொறுமையாக எங்களுக்கு அடிப்படை விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். ஒவ்வொரு வழக்கையும் அருகில் இருந்து கவனித்தது மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுத்தது.” என்று கூறியுள்ளனர்.
-ம.பவித்ரா








