கோவை மாநகர காவல் துறையில் பெண் காவல் ஆய்வாளர் தனது பாலினம் குறித்தும், சாதி குறித்தும் இழிவாகப் பேசி மனரீதியாக டார்ச்சர் செய்வதால், தனது வேலையை ராஜினாமா செய்யப் போவதாக திருநங்கை காவலர் நஸ்ரியா கமிஷ்னர்
அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா.
தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர் ராமநாதபுரத்தில் பணியாற்றி
வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அவர்
கோவைக்கு கடந்த 2020ம் ஆண்டு மாற்றப்பட்டார். கோவை மாநகர காவல் துறையில்
பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்து
வருகிறார்.
இந்நிலையில், திருநங்கை காவலர் நஸ்ரியா இன்று ராஜினாமா கடிதத்துடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவல் துறையில் பணியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு அத்துமீறல்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், தற்பொழுது தங்களது பிரிவில் ஆய்வாளராக உள்ள மீனாம்பிகை என்பவர் தனது பாலினம் குறித்தும், ஜாதி குறித்தும் இழிவாகப் பேசுவதாகவும், மனரீதியாக டார்ச்சர் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: ’நாட்டு நாட்டு’ Vibe-ல் பிரபுதேவா – வீடியோ இணையத்தில் வைரல்!
எனவே, தன்னால் இனி காவல்துறையில் பணியில் இருக்க முடியாது என தெரிவித்த திருநங்கை காவலர் நஸ்ரீயா தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்து இருப்பதாகவும், அந்த கடிதத்தை கொடுக்கவே காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, காவல் ஆணையர் அலுவலகத்தில் நஸ்ரியாவை அழைத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அப்போது திருநங்கை காவலர் நஸ்ரியா சொல்லும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டு, புகாரை எழுத்து பூர்வமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.
இதையடுத்து, திருநங்கை காவலர் நஸ்ரியா எழுத்துப்பூர்வமான புகார் அளித்தார்.
இதனிடையே திருநங்கை காவலர் நஸ்ரியா அளித்துள்ள புகார் குறித்து துணை ஆணையர்
சந்தீப் விசாரிப்பார் எனவும், ஏற்கனவே திருநங்கை காவலர் மீது ஒழுங்கு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இருந்தாலும் அவர் தற்போது
தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும்
எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
-ம.பவித்ரா








