திருநங்கைகள் தினத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் திருநங்கைகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த நாளை ஆண்டு தோறும் தேசிய திருநங்கையர் தினமாகக் திருநங்கைகள் கொண்டாடி வருகின்றனர். சென்னை சேத்துபட்டு திருநங்கைகள் காப்பகத்தில், திருநங்கைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்வில் சென்னை மாநகர வீடற்றவர்களுக்கான காப்பகங்களின் ஒருங்கிணைப்பாளர் ஆஷா கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டை போற்றும் வகையில் 21 மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு, முகக்கவசங்கள் வழங்கினர்.
திருநங்கைகள் அனைவரும் சமூகத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், சமூக வளர்ச்சிக்கு நாம் எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதுபற்றி பேட்டியளித்த கலைமாமணி விருதுபெற்ற திருநங்கை சுதா, “இந்த தினத்தை எங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாது, நீதிமன்றம் எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த தினம். ஆகவே அதை நினைவு படுத்தும் விதமாக இன்றைய தினத்தில் நாங்கள் இனிப்புகள் வழங்கியும், பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கியும், மரக்கன்றுகள் நட்டும் கொண்டாடுகிறோம்” என தெரிவித்தார்.
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள லீலாவதி நகரில் வசித்து வரும் திருநங்கைகள், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். சமுதாயத்தில் ஒரு சிலர் தற்போதும் தங்களை ஒதுக்கி வைப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். சமூகத்தில் தாங்களும் சரிநிகர் சமமாக வாழ்ந்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர். இதுபோலவே பல்வேறு இடங்களில் திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது.