ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை ஷெனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில் ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஏப். 24) ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். இதை நாம் தக்க வைத்து, தேர்ச்சி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சென்னை ஷெனாய் நகரில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் 500 மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கப்படும்.

நான் முதல்வன் திட்டத்தில் படித்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியினை நடத்தவுள்ளோம். நாளை மறுநாள்(ஏப். 26) நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.