அரக்கோணத்தில் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்2 பெட்டியின் சக்கரங்கள் சரியாக சுழலாததால், ரயில் நிறுத்தப்பட்டது. அந்த பெட்டி தனியாக கழற்றப்பட்ட பின் ரயில் அங்கிருந்து 2 மணி நேர தாமத்திற்குப் பின் புறப்பட்டு சென்றது.
பீகார் மாநிலம் பரோனியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் அருகில் வரும் போது எஸ்2 பெட்டியில் ரயில் சக்கரங்கள் இறுக்கிப்பிடித்தன. இதனால் சக்கரங்கள் சுலபமாக சுழல முடியாமல் ரயில் சக்கரங்களில் இருந்து புகையுடன் லேசான தீப்பொறி வந்ததாக தெரிகிறது.
இதனால் ரயிலை மெதுவாக இயக்கி அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓட்டுநர் நிறுத்தினார். உடனடியாக விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சக்கரங்களை சரி செய்ய முயன்றனர். ஆனாலும் சரி செய்ய முடியாத காரணத்தால் எஸ்2 பெட்டியை தனியாக கழற்றி அரக்கோணம் யார்டில் நிறுத்தினர்.
எஸ்2 பெட்டியில் இருந்த 67 பயணிகளை வேறு பெட்டியில் மாற்றி உட்கார வைத்தனர். அதன் பிறகு இரண்டு மணி நேர காலதாமத்தில் ரயில் அங்கிருந்து புறப்பட்டது. ஏற்கனவே இந்த ரயில் 10 மணி நேரம் தாமதமாக வந்த நிலையில் அரக்கோணத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.









